அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்து உள்ளது.
அதன்படி வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பத்திரிகையாளர்கள், நகராட்சி ஊழியர்கள், அரசு ஊழியர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் ஊட்டி சப்-கலெக்டர் அலுவலகம், கூடலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், குன்னூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. 5 இடங்களில் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்பவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் உள்பட அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் முடிவு ஓரிரு நாளில் கிடைத்துவிடும்.
இன்று (வியாழக்கிழமை) ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் 451 அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) போலீசாருக்கு பரிசோதனை முகாம் நடக்கிறது. நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால்தான் கட்டாயம் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
Related Tags :
Next Story