கட்டுப்பாட்டை மீறும் பொதுமக்கள்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்


கட்டுப்பாட்டை மீறும் பொதுமக்கள்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்
x
தினத்தந்தி 28 April 2021 6:53 PM GMT (Updated: 28 April 2021 6:53 PM GMT)

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் மீறுகிறார்கள். அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.


திருச்சி, 
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் மீறுகிறார்கள். அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. பின்னர் எப்படி கட்டுக்குள் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மின்னல் வேக கொரோனா

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அனைத்து மாநில மக்களையும் பாடாய் படுத்தி வருகிறது. கொரோனாவின் கொடிய கரங்களுக்கு தமிழகமும் தப்பவில்லை. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருந்தது. 

தற்போது நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் என மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 20-ந்தேதியில் இருந்து இரவு நேர ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள்

அதன்பின்னரும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்கிற நிலை ஏற்பட்டதால் அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்தது. அதன்படி அரசு நெறிமுறைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டன. 

டீக்கடைகள், ஓட்டல்கள் இயங்கலாம். ஆனால் அங்கேயே அமர்ந்து டீ குடிக்கவும், உணவுகளை சாப்பிடவும் அனுமதி இல்லை என்றும், உணவுகளையும், டீயையும் பார்சல் செய்து  விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் கட்டுப்பாடுகளை அறிவித்து.

நெறிமுறை மீறல்

இந்த கட்டுப்பாடுகள் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் அரசு பிறப்பித்துள்ள இந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். பெரிய நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் டீக்கடைகளில் பொதுமக்கள் சர்வ சாதாரணமாக நின்று கொண்டே டீ வாங்கி குடிக்கிறார்கள். 

இது எல்லா இடங்களிலும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஓட்டல்களை பொறுத்தவரை பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிப்பது இல்லை என்றாலும், சிறிய தெருக்கள் மற்றும் முக்கியத்துவம் இல்லாத சாலைகளில் உள்ள ஓட்டல்களில் உணவினை அமர்ந்து சாப்பிடுவதற்கு அதன் உரிமையாளர்கள் அனுமதிக்கத்தான் செய்கிறார்கள்.

தனிமனித இடைவெளி

மளிகைக்கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் இயங்குவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும், அவற்றில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் சமூக இடைவெளியை மறந்து ஒருவருக்கு ஒருவர் உரசிக்கொண்டு பொருட்கள் வாங்கும் காட்சிகளை அன்றாடம் காணமுடிகிறது.

வணிக வளாகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்கள் கொண்டு இயங்கலாம் என அரசு தளர்வுகள் விதித்து இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி கட்டுக்கடங்காத கூட்டத்துடன் தான் வணிக வளாகங்கள் திருவிழா கூட்டம் போல் காணப்படும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தது.

எப்படி கட்டுக்குள் வரும்?

ஆனால் அந்தக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க பொதுமக்கள் தயாராக இல்லை. ஏன் வெளியில் நடமாடும் போது பலர் முக கவசம் கூட அணிவதில்லை. வியாபாரிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அரசு யாருக்காக இதனை சொல்கிறது. நம் உயிரைக் காப்பதற்காக தானே, இந்த கட்டுப்பாடுகளை அறிவிக்கிறது என்ற விழிப்புணர்வு, அக்கறை பொதுமக்களுக்கு இல்லை.

அரசின் உத்தரவை அமல்படுத்த வேண்டிய மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வது இல்லை. இதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

Next Story