திருவோணம் அருகே சாலையோரத்தில் இருந்த பேனர் விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் படுகாயம் போலீசார் விசாரணை
திருவோணம் அருகே சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர் விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:-
திருவோணம் அருகே சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர் விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துக்க நிகழ்ச்சிக்கு...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்துள்ள அம்மானிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவருடைய மனைவி விஜயராணி(வயது 55). இவர், நேற்று முன்தினம் திருவோணம் அருகே உள்ள ஒடப்பவிடுதி கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் அழகன்விடுதியை சேர்ந்த பரமசிவம் என்பவருடன் தனது சொந்த ஊரான அம்மானிப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை பரமசிவம் ஓட்டினார். விஜயராணி பின்னால் உட்கார்ந்திருந்தார்.
பேனர் விழுந்ததில் பெண் படுகாயம்
இவர்கள் திருவோணம்- கறம்பக்குடி சாலையில் மேட்டுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த பேனர் திடீரென மோட்டார் சைக்கிளில் சென்ற பரமசிவம் மற்றும் விஜயராணி ஆகியோர் மீது விழுந்தது.
அப்போது விஜயராணி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த அடிபட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து விஜயராணியின் கணவர் சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவோணம் பகுதியில் சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்களால் விபத்து ஏற்படுவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story