மின்சாரத்தை உடலில் பாய்ச்சி குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சாவு; தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி தலைவர் கைது


மின்சாரத்தை உடலில் பாய்ச்சி குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சாவு; தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி தலைவர் கைது
x
தினத்தந்தி 29 April 2021 1:15 AM IST (Updated: 29 April 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

தாண்டிக்குடி அருகே குடிநீர் தொட்டி ஆபரேட்டர் தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி இறந்துபோனார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பூலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

பெரும்பாறை:
தாண்டிக்குடி அருகே குடிநீர் தொட்டி ஆபரேட்டர் தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி இறந்துபோனார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பூலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். 
குடிநீர் ஆபரேட்டர்
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள பூலத்தூரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 58). இவர், பூலத்தூர் ஊராட்சியில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி இறந்துவிட்டார். அவரது மகன், மகள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் குமரேசன் மட்டும் பூலத்தூரில் வசித்து வந்தார். 
குமரேசனுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், குமரேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார். 
மர்ம சாவு
இந்தநிலையில் குமரேசன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் மின்கம்பி உடலில் சுற்றிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த குமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து குமரேசனின் மகன் கதிரேசன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது தந்தைக்கும், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தனுக்கும் இடையே தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் எனது தந்தையை ஆனந்தன் ஆபாசமாக பேசி, தாக்கினார். இதனால் மனமுடைந்த எனது தந்தை இறந்துவிட்டார். எனவே ஆனந்தன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரேசன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து முதலில் விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது உடலில் தானே மின்கம்பியை சுற்றி வைத்து மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
இதையடுத்து குமரேசனை தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். 

Next Story