போலீசாருக்கான கொரோனா சிகிச்சை மையம் அமைக்க முடிவு


போலீஸ்  கமிஷனர் கமல்பந்த்.
x
போலீஸ் கமிஷனர் கமல்பந்த்.
தினத்தந்தி 28 April 2021 8:43 PM GMT (Updated: 28 April 2021 8:43 PM GMT)

பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாருக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறினார்.

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாருக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறினார்.

சிகிச்சை மையம்

பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனா் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்கு போலீசாரும் உள்ளாகி வருகின்றனர். நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், பொதுமக்களுடன் நெருங்கி பழக வேண்டிய நிலை ஏற்படுவதால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கயைாக பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் போலீசார், ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. போலீசாருக்கு சரியான சிகிச்சை கிடைக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது போலீசாருக்கு என்று 100 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. கூடிய விரைவில் 200 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட இருக்கிறது. 

நகர ஆயுதப்படை போலீசார் உள்பட அனைத்து போலீசாருக்கும் சரியான சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், முன் எச்சரிக்கையாக பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரபல நடிகர் சோனு சூட் தன்னுடைய அறக்கட்டளையில் இருந்து பெங்களூரு போலீசாருக்காக 2 ஆக்சிஜன் எந்திரங்களை வழங்கி உள்ளார். இதற்காக அவருக்கு பெங்களூரு மாநகர போலீசார் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

 42 போலீசாருக்கு கொரோனா

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று  ஒரே நாளில் 42 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூருவில் கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 100 போலீசார் மீண்டுள்ளனர். 59 போலீசார் இன்னும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 491 போலீசார் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இதுவரை பெங்களூருவில் 6 போலீசார் தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர்.

பெங்களூருவில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாலும், குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் அமலுக்கு வந்த ஊரடங்கின் போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய இருப்பதால், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவிததுள்ளனர்.

Next Story