சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை


சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 28 April 2021 9:42 PM GMT (Updated: 28 April 2021 9:42 PM GMT)

சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சிக்கமகளூரு: சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. 

சிறுமி கற்பழிப்பு 

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் அருகே அகசரநகர் பகுதியை சேர்ந்தவர் சுஜித்(வயது 24). இவருக்கும் அப்பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுஜித்தும், சிறுமியும் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து சென்ற சுஜித் அங்கு வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்ல கூடாது என்று சிறுமியை, சுஜித் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன சிறுமி வீட்டிற்கு சென்றதும் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுது உள்ளாள். 

20 ஆண்டுகள் சிறை 

இதனால் அதிா்ந்து போன சிறுமியின் பெற்றோர், சுஜித் மீது பாலேஒன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஜித்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிக்கமகளூரு கோர்ட்டில் போலீசார் வழக்கும் தொடர்ந்து இருந்தனர். 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை சுஜித் கற்பழித்து நிரூபணம் ஆகி உள்ளதால், சுஜித்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.60 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். 

மற்றொரு வழக்கு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே வளச்சில் பகுதியை சேர்ந்தவர் நசீர்(33). இவர் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து இருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நசீைர கைது செய்தனர். மேலும் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த சமீர் என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார். 

கைதான 2 பேர் மீதும் மங்களூரு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி சாவித்ரி பட் தீர்ப்பு கூறினார். அப்போது நசீருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சமீருக்கு 6 மாதம் சிறையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story