தொடர் விபத்தில் சிக்கும் நாடார் மேடு பகுதி அச்சத்தில் வாகன ஓட்டிகள்-பொதுமக்கள்


தொடர் விபத்தில் சிக்கும் நாடார் மேடு பகுதி அச்சத்தில் வாகன ஓட்டிகள்-பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 April 2021 4:48 AM IST (Updated: 29 April 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விபத்தில் சிக்கும் நாடார் மேடு பகுதியில் செல்லும்போது வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சப்படும் நிலை உள்ளது.

நெரிசலான பகுதி
ஈரோடு மாநகர் பகுதியில் மிகவும் நெரிசலான பகுதிகளில் ஒன்று நாடார்மேடு பகுதி. மிகவும் குறுகலான ரோடு, அதிக நெருக்கடியான குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகள் என்று மக்கள் நெரிசலான பகுதியாக இது உள்ளது.
காளைமாடு சிலை அருகில் இருந்தே நெரிசல் தொடங்கி விடுகிறது. கொல்லம்பாளையம் பகுதியில் இந்த நெரிசல் மிகவும் அதிகமாகவே இருக்கும். நாடார் மேடு-சாஸ்திரிநகர் பிரிவில் இருந்து மூலப்பாளையம் பிரிவு பகுதிவரை வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்லவேண்டிய பகுதியாக உள்ளது.
ஜீவானந்தம் ரோடு
இங்கு கொல்லம்பாளையத்துக்கும் நாடார்மேட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஜீவானந்தம் ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாக கரூர் ரோட்டுக்கு செல்ல முடியும். அதுபோல் பச்சப்பாளி, செட்டிப்பாளையம் வழியாக ரிங்ரோடு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இதனால் ஜீவானந்தம் ரோடு பரபரப்பான ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் இருந்து கொல்லம்பாளையம் மெயின் ரோட்டுக்கு (பூந்துறை ரோடு) வந்து சேரும் இடம் பெரிய மேட்டுப்பகுதியாக இருக்கிறது. அது முக்கியமான ரோடு என்பதால் ஈரோட்டில் இருந்து மூலப்பாளையம் வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்லும். அருகில் பிரபல ஆஸ்பத்திரிகள் இருப்பதால் ஆம்புலன்சுகளும் அடிக்கடி செல்லும். இதனால், கரூர் சாலையில் இருந்து ஜீவானந்தம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் மெயின் ரோடு சந்திப்பில் வரும்போது மேடு பகுதியில் வேகமாக வந்து கடக்க முடியாத நிலை உள்ளது.
தொடரும் விபத்துகள்
கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன. மேடு பகுதியில் கடக்க முடியாத வாகனங்கள் அங்கு சாலையின் நடுவில் நிறுத்தப்படுகின்றன. அப்போது பார வண்டிகள், குறிப்பாக லாரி, டெம்போ ஆகியவை பாரம் தாங்காமல் பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடைக்கு செல்வதற்காக வந்த பெண் ஒருவர் மீது பாரம் ஏற்றி வந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று ஏற்படுத்திய விபத்தில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.
இதுபோல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் பலமுறை நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடரும் விபத்துகள் அந்த பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்தில் மாற்றம்
எனவே ஜீவானந்தம் ரோட்டை கரூர் சாலைக்கு செல்லும் ஒரு வழிப்பாதையாக மட்டும் மாற்ற வேண்டும். இல்லை என்றால், ஜீவானந்தம் சாலையில் இருந்து ஈரோடு ரோட்டுக்கு நேரடியாக வாகனங்கள் செல்ல முடியாதவகையில் அங்கு தடுப்பு வைக்கப்பட்டு, வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி பின்னர் யு டர்ன் எடுத்து செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story