ஆர்.கே.பேட்டையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் பறிப்பு


ஆர்.கே.பேட்டையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 29 April 2021 11:54 AM IST (Updated: 29 April 2021 11:54 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.பேட்டையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் பறிக்கப்பட்டது.

பணம் பட்டுவாடா

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டையில் பள்ளிப்பட்டு சாலையில் வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர், முதியோர், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஊழியர்கள் மூலம் வங்கியின் முன்புறம் அமர்ந்து பணம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம். நேற்று காலை வங்கி ஊழியர் வங்கனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி (வயது 49) என்பவர் வங்கியின் முன்புறம் அமர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வங்கி ஊழியர் பாரதியிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு அங்கிருந்து மாயமாக மறைந்தனர்.

போலீசில் புகார்

இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு ‘‘திருடன்’’ ‘‘திருடன்’’ என்று கத்திய போது மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இது குறித்து ஊழியர் பாரதி ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். பறி கொடுத்த பணப்பையில் ரூ.1 லட்சம் இருந்ததாக தனது புகாரில் அவர் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பையை பறித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 


Next Story