தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்   கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 29 April 2021 1:14 PM GMT (Updated: 29 April 2021 1:14 PM GMT)

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீரென்று இறந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீரென்று இறந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் திடீர் சாவு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குமரெட்டியாபுரம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் இருமல், சளி தொல்லை காரணமாக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கு இருந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் படுக்கை ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த பெண் திடீரென பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பெண் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிகாரிகள் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ள பகுதியிலும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

பற்றாக்குறை இல்லை

இதுகுறித்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி கூறியதாவது:- தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 1,212 படுக்கை வசதி உள்ளது. இதில் 700 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு என்று தனி வார்டு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. மீதம் உள்ள 150 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆக்சிஜன் கொள்கலனை பொறுத்தவரை 10 கிலோ லிட்டர், 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கொள்கலன்கள் உள்ளன. இதில் 10.06 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.

பி வகை சிலிண்டர் 200-ம், டி வகை சிலிண்டர் 100-ம் கையிருப்பில் உள்ளது. எனவே, அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் ஆக்சிஜன், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவிர் மருந்து

ரெம்டெசிவிர் போன்ற சிகிச்சைக்கான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. கொரோனா அறிகுறிகளோடு அல்லது கொரோனா பாதித்த நிலையில் வரக்கூடிய கர்ப்பிணிகளுக்கு தேவையான அறுவை சிகிச்சையும், கொரோனா பாதிப்பு, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் அவசர அறுவை சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கமும் தனியாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா வார்டில் பணிபுரிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர சுகாதார பணியாளர்கள் போதுமான அளவில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். கொரோனா பரிசோதனை செய்வதற்கு தனியாக மையமும் உள்ளது.

தடுப்பூசி

இதே போன்று கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதுவரை 13 ஆயிரத்து 333 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொதுப்பிரிவு வார்டில் 423 நோயாளிகளும், கொரோனா வார்டில் 311 நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதே போன்று குழந்தைகள் நலம், முடநீக்கியல், மூளை நரம்பியல், பொது அறுவை சிகிச்சை, புற்றுநோய் கதிர்வீச்சு, காது, மூக்கு, தொண்டை, சுவாச நோய், மருத்துவம் போன்ற இதர துறைகளும் எந்தவித இடையூறும் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story