ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம் வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராமமக்கள்


ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு:  துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் திடீர் ஆர்ப்பாட்டம்  வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராமமக்கள்
x
தினத்தந்தி 29 April 2021 1:45 PM GMT (Updated: 29 April 2021 1:45 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வீடுகளில் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றினார்கள்.

தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வீடுகளில் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றினார்கள்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பல்வேறு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உருவப்படங்களை கைகளில் ஏந்தி வந்தனர்.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டரிடம் மனு

பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதித்தனர்.

அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட எங்களின் உறவினர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு, தடியடியால் இறந்து உள்ளனர். பலர் காயம் அடைந்து உள்ளனர். அதனை மறக்கவும், மன்னிக்கவும் முடியாது.

ஆலையை திறக்கக்கூடாது

நிரந்தரமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இந்தியாவுக்கே தருகிறோம் என்று பொய்யான காரணங்களை கூறி திறக்கப்பட உள்ளது. இது எங்கள் உள்ளங்களில் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. ஆலை திறக்கப்படுவது எங்கள் உறவுகளின் தியாகங்களை இழிவுபடுத்தி மேலும் எங்களின் வலிகளையும், வேதனைகளையும் அதிகப்படுத்தி உள்ளது.

எனவே, ஆக்சிஜன் உற்பத்திக்கு பல வழிகள் உள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

வீடுகளில் கருப்பு கொடி

இதற்கிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு தினம் கடைபிடிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பண்டாரம்பட்டி, மீளவிட்டான் கிராம பகுதியில் மக்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்தனர். மேலும், வீட்டு வாசலில் ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய வலியுறுத்தி வாசகம் எழுதி கோலமிட்டு இருந்தனர்.

இதேபோன்று அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஹென்றிதாமஸ் அலுவலகத்திலும் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. பிற இடங்களில் எந்தவித போராட்டமும் நடைபெறவில்லை.

பாதுகாப்பு

இந்த சம்பவங்களால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story