கடலூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
கடலூர்,
கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் முடிவடைந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கிடையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
அதன்படி கடலூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு நேற்று கடலூர் தாலுகா அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் தாலுகா அலுவலக ஊழியர்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் ஊழியர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டனர். இதை தாசில்தார் பலராமன் ஆய்வு செய்தார். பரிசோதனை முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தெரியவரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story