கர்நாடகாவில் முழு ஊரடங்கு முடியும் வரை தலமலை வனச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும்
கர்நாடகாவில் முழு ஊரடங்கு முடியும் வரை தலமலை வனச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி,
தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் செல்ல வேண்டுமானால் கர்நாடக மாநிலத்துக்குள் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்துதான் தமிழக பகுதியில் செல்லமுடியும்.
தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் வழியாக செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாற்று பாதையான தலமலை வழியாக பஸ், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
கட்டணம் வசூல்
தலமலை வனச்சாலை என்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு என்பதால் வாகனங்கள் அனைத்தும் தலமலை வனச்சாலை வழியாக செல்கிறது.
இந்த சாலைவழியாக செல்லும் வாகனங்களுக்கு வனத்துறை கட்டாய கட்டண வசூல் செய்துவருகிறது. இதனால் வாகனங்கள் வனத்துறை சோதனை சாவடியில் அணிவகுத்து நின்று வருகிறது.
இதுபற்றி தாளவாடி பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘கர்நாடகாவில் முழு ஊரடங்கு காரணமாக புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் மாற்று பாதையான தலமலை வழியாக சென்று வருகிறோம். ஆனால் தற்போது வனத்துறையினர் கட்டாய கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விலக்கு அளிக்க கோரிக்கை
வேறு பாதை இல்லாத காரணத்தால் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கொரோனா காலத்தில் கட்டாய வசூல் செய்வதால், வாகனங்கள் சோதனை சாவடியில் காத்து கிடக்க வேண்டிய நிலைஏற்பட்டு உள்ளது.
எனவே கர்நாடகாவில் ஊரடங்கு காலம் முடியும் வரை இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். அதே போல் தாளவாடி செல்லும் வாகனங்களை புளிஞ்சூர் சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story