புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்
புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தந்தி டி.வி. வெளியிட்டுள்ளது.
தந்தி டி.வி. கருத்து கணிப்பு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் களத்தில் நின்றன. இதுதவிர மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியது.இருப்பினும் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் இடையே தான் கடும் போட்டி நிலவியது. சில தொகுதிகளில் சுயேச்சைகளும் பலம் காட்டினர்.வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து
கணிப்பு முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.
வெற்றி யாருக்கு?
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தந்தி டி.வி. மூலம் நடத்தப்பட்டது.கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இந்த தேர்தலில் 3 தொகுதிகளும், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், 4 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாகவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழக சட்டசபை
புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடைபெற்ற கடந்த 6-ந்தேதியன்றே தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. தந்தி டி.வி. சார்பில் மாவட்டங்கள் வாரியாக 7 மண்டலமாக பிரிக்கப்பட்டு இந்த கருத்து கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 68 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 133 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், 33 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாகவும் தந்தி டி.வி. கருத்து கணிப்பு
முடிவுகளில் தெரியவந்துள்ளன.7 மண்டலங்களில் சென்னை மண்டலத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் என 4 மாவட்டங்களில் மொத்தம் 37 தொகுதிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. கூட்டணிக்கு 7 தொகுதிகளும், தி.மு.க. கூட்டணிக்கு 24 தொகுதிகளும் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், 6 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாகவும் தெரியவருகிறது.
வடக்கு, மத்திய மண்டலங்கள்
வடக்கு மண்டலத்தில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 32 தொகுதிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. அணிக்கு 9 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு 16 தொகுதிகளும் சாதகமாக இருப்பதாகவும், 7 தொகுதிகளில் கடும் போட்டியும் நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.மத்திய கிழக்கு மண்டலத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் என 3 மாவட்டங்களில் 20 தொகுதிகள் உள்ளன. இதில், 7 தொகுதிகள் அ.தி.மு.க. அணிக்கும், 11 தொகுதிகள் தி.மு.க. அணிக்கும் சாதகமாக இருப்பதாகவும், 2 தொகுதிகளில் கடும் போட்டி
நிலவுவதாகவும் தெரியவந்துள்ளது.மத்திய மண்டலத்தில் திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 26 தொகுதிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 8 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு சாதகமாக 12 தொகுதிகளும் உள்ளன. 6 தொகுதிகளில் கடும் போட்டியும் நிலவுகிறது.
டெல்டா, மேற்கு, தெற்கு மண்டலங்கள்
டெல்டா மண்டலத்தில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் 18 தொகுதிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. அணிக்கு 5 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு 13 தொகுதிகளும் சாதகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.மேற்கு மண்டலத்தில் சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் என 7 மாவட்டங்கள் உள்ளன. இதில், மொத்தம் 50 தொகுதிகள் அடங்கியுள்ளன. அதில், அ.தி.மு.க. கூட்டணிக்கு 21 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு 22 தொகுதிகளும் சாதகமாக இருப்பதாகவும், 7 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாகவும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
தெற்கு மண்டலத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி என 9 மாவட்டங்களில் மொத்தம் 51 தொகுதிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. அணிக்கு சாதகமாக 11 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு சாதகமாக 35 தொகுதிகளும், 5 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாகவும் தெரியவந்திருக்கிறது.
Related Tags :
Next Story