கொரோனா சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 படுக்கைகள்


கொரோனா சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 படுக்கைகள்
x
தினத்தந்தி 4 May 2021 12:09 AM GMT (Updated: 4 May 2021 12:09 AM GMT)

கொரோனா சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 படுக்கைகள்.

சென்னை, 

சென்னையில் தினசரி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதனால், சென்னையில் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 1,200 படுக்கைகள் இருக்கும் நிலையில், கூடுதலாக 1,250 படுக்கைகள் அமைக்கப்பட்டது. இதேபோல், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 1,600 படுக்கைகள் உள்ளன. தற்போது கூடுதலாக 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “லேசான மற்றும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புள்ளவர்கள் வீடுகளிலும், ஓரளவு பாதிப்புள்ளவர்கள் கண்காணிப்பு மையங்களிலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொற்றின் தீவிரத்தால் கடும் பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லேசான மற்றும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புள்ளவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

Next Story