மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன


மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
x
தினத்தந்தி 6 May 2021 4:56 PM GMT (Updated: 6 May 2021 4:56 PM GMT)

தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொள்ளாச்சி

தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 20-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இரவு நேர ஊரடங்கு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. 

இதற்கிடையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால்  மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக பொள்ளாச்சி பகுதிகளில் மளிகை கடைகள், காய்கறி, பழக்கடைகள், காந்தி மார்க்கெட், திரு.வி.க. மார்க்கெட், தேர்நிலை திடல் மார்க்கெட்டுகளில் உள்ள கடைகள் மட்டும் திறந்து இருந்தன. 

பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் திரண்டதால் சத்திரம் வீதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதை தவிர மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. இதற் கிடையில் பேக்கரிகள், உணவகங்கள், டீக்கடைகள் திறக்கப் பட்டு, பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.

 அதே நேரத்தில் ஜவுளி கடைகள், நகை கடைகள், பாத்திர கடைகள், செல்போன் கடைகளை திறக்க அனுமதி இல்லாததால் மூடப்பட்டன.

வாகன சோதனை

கடைகள் மூடப்பட்டதால் மார்க்கெட் ரோடு, கோவை ரோடு, பாலக்காடு ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, கடை வீதி, சத்திரம் வீதிகளில் வாகன போக்குவரத்து குறைந்தது. 

மேலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோன்று ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் காலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

இதை தொடர்ந்து பகல் 12 மணிக்கு பிறகு மருந்து கடைகள், பால் வினியோகம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டன. 

மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.


Next Story