இலவச பயணத்தால் மிச்சப்படும் பஸ் கட்டண ெதாகை, குடும்ப தேவைக்கு பயன்படும்; பெண்கள் மகிழ்ச்சி


இலவச பயணத்தால் மிச்சப்படும் பஸ் கட்டண ெதாகை, குடும்ப தேவைக்கு பயன்படும்; பெண்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 May 2021 7:52 PM GMT (Updated: 8 May 2021 7:52 PM GMT)

இலவச பயணத்தால் மிச்சப்படும் பஸ் கட்டணத்திற்கான தொகை, குடும்ப தேவைக்கு பயன்படும் என்று பெண்கள் தெரிவித்தனர்.

பெரம்பலூர்

குடும்ப தேவைக்கு பயன்படும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ெபரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்தது குறித்து பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு;-
பெரம்பலூர் அரசு மருத்துவமனை பணியாளர் மகாலட்சுமி:
சாதாரண கட்டண அரசு டவுன் பஸ்களில் அனைத்து மகளிரும் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதலில் பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த அறிவிப்பு பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பெரிதும் பயனடைவார்கள். முன்பெல்லாம் பஸ் கட்டணத்திற்கென்று தனி தொகை ஒதுக்கி வைத்திருப்போம். தற்போது அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதால், அந்த தொகையை இனி குடும்ப தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதல்-அமைச்சருக்கு நன்றி
அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவிலை சேர்ந்த கனிமொழி:
கல்லூரி மாணவியான நான், தினமும் ஒட்டக்கோவிலில் இருந்து அரியலூருக்கு பகுதி நேர வேலைக்கு வந்து செல்கிறேன். இதனால் பஸ் கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.20 வரை செலவிட வேண்டியது இருந்தது. தற்போது முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி நேற்று முதல் நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறோம். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.600 வரை எனக்கு மிச்சமாகிறது. இந்த பணமானது எனது கல்லூரி செலவுக்கு பயன்படும். பெற்றோர்களுக்கும் செலவு மிச்சமாகும். என்னைப்போன்ற ஏழைப்பெண்களை பயன்பெற செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
வரப்பிரசாதம்
அரும்பாவூரை சேர்ந்த சர்மிளாபானு:
பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். குறிப்பாக எங்களை போன்ற தனியார் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் நாங்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. அரும்பாவூரில் இருந்து வேப்பந்தட்டை சென்று வருவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.24 செலவு ஆகிறது. தற்போது பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்வதால், எங்களை போன்றவர்களுக்கு மாதத்திற்கு குறைந்தது ரூ.400 முதல் 500 வரை மிச்சமாகும். மேலும் அரும்பாவூரில் இருந்து பெரம்பலூருக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகும்.
தா.பழூரை சேர்ந்த செல்வி:
நான் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறேன். இதற்காக தினமும் தா.பழூரில் இருந்து பஸ்சில் சென்று வருகிறேன். தற்போது நகர பஸ்களில் இலவச பயணம் செய்து வேலைக்கு சென்றுவரும்போது, எனக்கு ஒரு நாளைக்கு ரூ.20 மிச்சமாகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் ரூ.600 மிச்சமாகும். என்னைப்போல் குடும்ப தேவைக்காக வெளியூர்களில் சென்று தினமும் வேலை செய்து விட்டு வீட்டுக்கு திரும்பும் பெண்களுக்கு பஸ் கட்டணமின்றி இலவசமாக்கப்பட்டுள்ளது பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். இன்று(நேற்று) நான் வேலைக்கு சென்று வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

Next Story