தாம்பரம் நகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 27 தெருக்கள் மூடல் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
தாம்பரம் நகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 27 தெருக்கள் மூடப்பட்டு உள்ளன. தெருக்களை மூட எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் உச்சத்தை தொட்டு வருகிறது. தாம்பரம் நகராட்சி பகுதியில் 1,323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரே தெருக்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் நகராட்சி சார்பாக அந்த தெருக்கள் இரும்பு தகரம் கொண்டு மூடப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வாக்குவாதம்
இந்தநிலையில் தாம்பரம் ஜாகிர்உசேன் தெருவில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த தெருவை இரும்பு தகரங்களால் மூட நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜனார்த்தனம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள், “ஏன் தெருவை அடைக்கிறீர்கள்? எங்களுக்கு வெளியே செல்ல வழி வேண்டும். தெருவை அடைக்கக்கூடாது” என்று கூறி நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் நகராட்சி ஊழியர்கள், அந்த தெருவை அடைத்தனர். தாம்பரம் நகராட்சியில் மட்டும் இதுவரை 27 தெருக்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த தெருக்கள் தடுப்புகளால் மூடப்பட்டு உள்ளன.
வெளியில் நடமாட்டம்
பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த கொடூர நோய் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். கொரோனா பாதிப்பு காரணமாக அடைக்கப்பட்டு உள்ள தெருக்களில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்.
தாம்பரம் நகராட்சி பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கொரோனா நேயாளிகள் வீதிகளில் சுற்றி வருகின்றனர். இதுபோல் வெளியே சுற்றாமல் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா பரவலை கட்டு்ப்படுத்தலாம் என நகராட்சி ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.
Related Tags :
Next Story