தூத்துக்குடி மாவட்டத்தில் 127 பஞ்சாயத்துகளில் கொரோனா தொற்று இல்லை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 127 பஞ்சாயத்துகளில்  கொரோனா தொற்று இல்லை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 28 May 2021 4:13 PM GMT (Updated: 28 May 2021 4:13 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 127 பஞ்சாயத்துகளில் கொரோனா தொற்று இல்லை என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 127 பஞ்சாயத்துகளில் கொரோனா தொற்று இல்லை என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தொற்று இல்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 127 பஞ்சாயத்துகளில் கொரோனா தொற்றால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை. மேலும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் 159 பேரும், குமாரகிரியில் 112 பேரும், கூட்டுடன்காட்டில் 93 பேரும், வீரபாண்டியன்பட்டினத்தில் 53 பேரும், குலசேகரன்பட்டினத்தில் 239 பேரும், மெஞ்ஞானபுரத்தில் 102 பேரும், பரமன்குறிச்சியில் 77 பேரும், இனாம் மணியாச்சியில் 115 பேரும், பாண்டவர் மங்கலத்தில் 106 பேரும், இலுப்பையூரணியில் 66 பேரும், குளத்தூரில் 128 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பஞ்சாயத்து பகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 ஆயிரத்து 696 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 586 பேர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 143 பேர் கொரோனா பராமரிப்பு மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி
இதனால் கிராமப்புறங்களில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பஞ்சாயத்து பகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். சிவகளை பஞ்சாயத்தில் அதிகபட்சமாக 518 பேரும், புதியம்புத்தூரில் 470 பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர். 403 பஞ்சாயத்துகளிலும் மொத்தம் 15 ஆயிரத்து 670 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story