தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; விவசாயிகள் மகிழ்ச்சி
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரவலாக மழை
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி, கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தேனியில் பெய்த பலத்த மழையால் பங்களாமேடு ராஜவாய்க்கால் கரையோரம் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதேபோல் அரண்மனைப்புதூர் அம்பேத்கர் காலனி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. அங்கு மழைநீர் வெளியேற போதிய வழியின்றி சாக்கடை கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசியது. இதனால் மக்கள் பரிதவித்தனர்.
பருவமழை தீவிரம்
இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தேனி, பெரியகுளம், போடி, கம்பம், சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கும்பக்கரை அருவி, சுருளி அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோன்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ெபய்த மழையால் கொட்டக்குடி, முல்லைப்பெரியாறு, மூலவைகை ஆறு உள்ளிட்ட ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை அளவு
மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
ஆண்டிப்பட்டி-10.2, அரண்மனைப்புதூர்-30.2, போடி-4.4, கூடலூர்-4.8, மஞ்சளாறு-29, பெரியகுளம்-15, சோத்துப்பாறை-14, உத்தமபாளையம்-3.4, வைகை அணை-21, வீரபாண்டி-7, முல்லைப்பெரியாறு-40, தேக்கடி-9.6.
Related Tags :
Next Story