சின்ன வெங்காயம் விதைத்து பெரிய வெங்காயம் முளைத்தது


சின்ன வெங்காயம் விதைத்து பெரிய வெங்காயம் முளைத்தது
x
தினத்தந்தி 7 Jun 2021 4:55 PM GMT (Updated: 7 Jun 2021 4:55 PM GMT)

பொங்கலூர் அருகே சின்ன வெங்காயம் விதைத்து பெரிய வெங்காயம் முளைத்தது. கலப்பட விதைகளால் லட்சணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளர்.

பொங்கலூர்
பொங்கலூர் அருகே சின்ன வெங்காயம் விதைத்து பெரிய வெங்காயம் முளைத்தது. கலப்பட விதைகளால் லட்சணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளர்.
 சின்ன வெங்காய விதை
பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் மகாகணபதி அக்ரோ சென்டர் என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 51 கிலோ சின்ன வெங்காய விதை அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு கிலோ ரூ.6 ஆயிரம் வீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விதைகள் குரு அக்ரோ டெக் என்ற நிறுவனத்திடம் வாங்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
இந்த விதைகளை வாங்கி சாகுபடி செய்த கள்ளிப்பாளையம், வாவிபாளையம், குள்ளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். தற்போது சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனையாவதால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அறுவடை நெருங்கும் சமயத்தில் வயல்களில் சென்று பார்த்தபோது அதில் பெரும்பாலானவை பெரிய வெங்காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாம் சின்ன வெங்காய விதை வாங்கித்தானே சாகுபடி செய்தோம். ஆனால் தற்போது வயலில் பெரியவெங்காயம் விளைந்து இருக்கிறதே என்று கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
பேச்சுவார்த்தை
ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1லட்சத்திலிருந்து ரூ.1½ லட்சம் வரை செலவு செய்து சாகுபடி செய்தது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் சென்று கேட்டனர். ஆனால்  சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர், இந்த விதையை குரு அக்ரோடெக் என்ற நிறுவனத்திடமிருந்துதான் வாங்கி நான் விற்பனை செய்தேன். அதில் ஏதோ தவறு நடந்து இருப்பதாக அவர் தெரிவித்தார். 
இது குறித்து பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், விதைச்சான்று துணை இயக்குனர் வெங்கடாசலம், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் மனோகரன், பொங்கலூர் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்கள் ராஜலிங்கம் மலரவன் கதிரவன் ஆகியோர் சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களில் வந்து பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து விதை விற்பனை செய்த நிறுவன நிர்வாகிகள், கடை உரிமையாளர் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 
நஷ்டஈடு
விவசாயிகள் தரப்பில் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு கிலோ விதைக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு தருவதாக அந்த நிறுவனத்தினர் ஒப்புக்கொண்டனர்.
 மேலும் இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தருவது ஒருபுறமிருந்தாலும், கலப்பட விதைகளை விற்பனை செய்த கடை மற்றும் அதன் நிறுவனமான குரு அக்ரோட் டெக் ஆகிய இரு நிறுவனங்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். 
இந்த பேச்சுவார்த்தையின்போது கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி, அ.தி.மு.க.நிர்வாகிகள் யு.எஸ்.பழனிசாமி, புத்தரச்சல் பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story