கேரள, கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை


கேரள, கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 7 Jun 2021 6:19 PM GMT (Updated: 7 Jun 2021 6:20 PM GMT)

கேரள, கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை.

கூடலூர்,

நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கேரள, கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் அனுமதியின்றி வருபவர்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.

இ-பாஸ் நடைமுறை அமல்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து அவசர காரணங்களுக்கு மட்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று முதல் நீலகிரி மாவட்டத்துக்குள் வர இ-பாஸ் பெறும் முறை அமலுக்கு வந்தது. இதனால் கேரள, கர்நாடக எல்லைகள் இணையும் கூடலூரில் நாடுகாணி, கக்கநல்லா, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட 10 சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

திருப்பி அனுப்பினர்

சுற்றுலா உள்ளிட்ட அவசர தேவையின்றி நீலகிரிக்குள் வர யாரையும் அனுமதிக்கக்கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசின் வழிகாட்டுதலின்படி இ-பாஸ் பெறாமல் வருபவர்களையும் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. 

அதன்படி மாநில எல்லையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தமிழக அரசின் உத்தரவை அறியாமல் இ-பாஸ் இன்றி வந்த சில வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

வாகனங்கள் பறிமுதல்

இதுகுறித்து போலீசார் கூறும்போது, இ-பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் வர வாகனங்கள் அனுமதிக்கப்படும். இதை மீறி நுழைந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story