தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த 3 குழந்தைகள்


தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த 3 குழந்தைகள்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:44 PM GMT (Updated: 15 Jun 2021 6:44 PM GMT)

தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த 3 குழந்தைகளையும் டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் வித்யா. இவர் கர்ப்பமுற்று இருந்தார். கடந்த மாதம் 28-ந் தேதி காய்ச்சல் காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஆக்சிஜன் குறைவு இருந்ததால், அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. 30-ந்தேதி அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன.

இதில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகள் 1.5 கிலோ, 1.75 கிலோ, 1.3 கிலோ எடை கொண்டதாக இருந்தன. அந்த குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பாதுகாப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் நவீன கருவி மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டன. 

இதனால் 3 குழந்தைகளின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. 7 நாட்களுக்கு பிறகு 3 குழந்தைகளையும் தாயிடம் கொடுத்து தாய்ப்பால் வழங்கப்பட்டது. தற்போது 15 நாட்கள் நிறைவடைந்து இருப்பதால், குழந்தைகள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. தாயும் நலமாக உள்ளார். இதனால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தகவலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு தெரிவித்தார். அப்போது உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, டாக்டர் செந்தில்குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த 3 குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story