கொரோனா தொற்று குறைந்தது: சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை அதிகரிப்பு
கொரோனா தொற்று குறைந்துள்ளதால், சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவ தொடங்கியது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் படுக்கைகள் தட்டுப்பாட்டால், மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகளையும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவில் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகள் வந்து சென்றனர்.
ஆஸ்பத்திரிகளிலும் முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையிலும் நேற்று 410 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு, தினசரி வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டிருந்த கட்டிடங்கள், கொரோனா அல்லாத சிகிச்சைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி கூறியதாவது:-
கொரோனா அதிகரித்திருந்த நேரத்தில், முக்கியமல்லாத அறுவை சிகிச்சைகளை நிறுத்தி வைத்திருந்தோம். இந்தநிலையில் தற்போது அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தற்போது சென்னையில் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் அதிகளவில் நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். நேற்று மட்டும் 5 ஆயிரம் புறநோயாளிகள் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றுள்ளனர்.
தற்போது 317 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கான படுக்கைகளும் 2,500-லிருந்து 1,500-ஆக குறைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 334 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று குறைந்து வருவதால், தற்போது முக்கியமல்லாத மற்ற நோய்களுக்கும் சிகிச்சை முழுமையாக வழங்கப்படுகிறது என்றும், கொரோனா அதிகரித்த நேரத்தில், பிற நோய்களுக்காக தினசரி 4 ஆயிரம் புறநோயாளிகள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 7 ஆயிரம் அளவில் புறநோயாளிகள் வருவதாகவும் டாக்டர்கள் தெரித்தனர்.
மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்போது 154 கொரோனா நோயாளிகள் இருப்பதாகவும், ஜூலை முதல் வாரத்தில் இருந்து முக்கியம் அல்லாத அறுவை சிகிச்சைகளும், கொரோனா அல்லாத சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், மருத்துவமனை ‘டீன்’ தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story