பயணிகள் கூட்டத்தால் களை கட்டிய திண்டுக்கல் பஸ் நிலையம்
அண்டை மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டதையடுத்து பயணிகள் கூட்டத்தால் திண்டுக்கல் பஸ் நிலையம் நேற்று களைகட்டியது.
திண்டுக்கல்:
அண்டை மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டதையடுத்து பயணிகள் கூட்டத்தால் திண்டுக்கல் பஸ் நிலையம் நேற்று களைகட்டியது.
பஸ் போக்குவரத்து
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதையடுத்து கடந்த மே மாதம் 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
இதற்கிடையே கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 21-ந்தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
11 மாவட்டங்களில் இயக்கம்
அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து திண்டுக்கல், தேனி, திருச்சி உள்பட 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதேநேரம் கரூர், ஈரோடு, கோவை, சேலம் உள்பட 11 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கான தடை நீடித்தது. அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ரெயில்கள் மூலம் வெளியூர்களுக்கு சென்று வந்தனர். மேலும் இ-பதிவு செய்து வாடகை வாகனங்களிலும் சென்று வந்தனர்.
இந்த நிலையில் கோவை, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று முதல் அந்த மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
களைகட்டிய பஸ் நிலையம்
இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து கரூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக திண்டுக்கல் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதே என்ற நினைத்துக்கொண்டு பயணிகள் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு நெருக்கமாக நின்று பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அதிலும் கரூர், சேலம், கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்தபடி பஸ்களில் ஏறி பயணம் செய்ததை காண முடிந்தது. பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்தது. வடை, இனிப்பு வகைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை பயணிகள் வாங்கிக்கொண்டு பஸ்களில் பயணம் செய்தனர்.
Related Tags :
Next Story