திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டன.
முருகபவனம்:
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டன.
ஊரடங்கில் தளர்வு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையே கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்கள், ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் நேற்று திறக்கப்பட்டன.
கோவில்கள் திறப்பு
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் காலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு ஞானாம்பிகை-காளகத்தீசுவரர், சுவாமி பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
அதேபோன்று திண்டுக்கல் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவில், மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், நத்தம் மாரியம்மன் கோவில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவில், நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நடைகளும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேவாலயங்கள்
இதேபோல் திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் பேராலயம், மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம் மற்றும் என்.ஜி.ஓ. காலனி, குமரன்திருநகர் உள்பட திண்டுக்கல் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்கு தேவாலயங்களும் திறக்கப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயம், டி.இ.எல்.சி. தேவாலயங்கள் திறக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் மற்றும் நாகல்நகர், ரவுண்டு ரோடு உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர்.
வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story