பணிநீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் தர்ணா போராட்டம். போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு


பணிநீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் தர்ணா போராட்டம். போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 5 July 2021 4:58 PM GMT (Updated: 5 July 2021 4:58 PM GMT)

வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகம் அருகே நர்சுகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

வேலூர்

வேலையிழப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவியதையொட்டி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை, தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள், நர்சுகள் என சுமார் 106 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் கடந்த 2 மாதங்களாக பணியில் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவர்களுக்கு வேலை இல்லை எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அனுப்பி விட்டது.

 இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி நர்சுகள் இருபிரிவுகளான பிரிந்து மனு அளிக்க சென்றனர்.

அவர்களை சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது. உங்களில் ஒருசிலர் மட்டும் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

வாக்கு வாதம்

ஆனால் அவர்கள் அனைவரையும் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். இதனால் போலீசார் கயிறை பயன்படுத்தி அரண் போல் நின்று அவர்களை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், நர்சுகளுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து மேம்பாலம் கீழே அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை கைது செய்ய போலீசார், வாகனத்தை வரவழைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நர்சுகள் கூறியதாவது:-

தனியார் வேலையும் போய் விட்டது

நாங்கள் ஏற்கனவே பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தோம். கொரோனா சிகிச்சை வார்டுகளில் வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டதும் அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக ஊதியத்தின் அடிப்படையில் பணியில் சேர்ந்தோம். தற்போது கொரோனா வார்டுகள் காலியாகி வருகின்றன. இதனால் வேலை இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி விட்டார்கள்.
மேலும் 2 மாதங்களாக பணியாற்றியதற்கு சம்பளம் வழங்கவில்லை. இந்த வேலையை நம்பி ஏற்கனவே தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றிய வேலையும் போய்விட்டது. அங்கு எங்களுக்கு மீண்டும் வேலை தர மாட்டார்கள். எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். 2 மாத ஊதியம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமரச பேச்சுவார்த்தைக்கு பின் 10 பேர் மட்டுமே கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளித்தனர். அங்கிருந்து நர்சுகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story