கோவில்கள் திறப்பு; உற்சாகத்துடன் பக்தர்கள் தரிசனம்


கோவில்கள் திறப்பு; உற்சாகத்துடன் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 July 2021 12:06 AM IST (Updated: 6 July 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று கோவில்கள் திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிள்ளையாரப்பா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர்.

திருப்பத்தூர்,

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று கோவில்கள் திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிள்ளையாரப்பா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர்.

கொரோனா 2-வது அலை

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் சாமிக்கு பூஜைகள் மட்டும் நடைபெற்றன, பக்தர்கள் கோவில் கோபுர வாசலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கு முறையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் ஒரு அங்கமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் நேற்று முதல் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியது.

கோவில்கள் திறப்பு

 சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டையார் காளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர், சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையொட்டி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டு கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அர்ச்சனைக்கு அனுமதி இல்லை

தொடர்ந்து போதிய சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அர்ச்சனைகள் ஏதும் கிடையாது என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கற்பக விநாயகா, பிள்ளையாரப்பா என மனமுருகி பக்தர்கள் வழிபட்டனர். அதே போல் குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் பக்தர்கள் ஓம் முருகா, கந்தனுக்கு அரோகரா, வேல், வேல் வெற்றி வேல் என பக்தி கோஷம் எழுப்பினார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிப்பட்டதால் பக்தர்கள் உற்சாகத்துடன் கோவிலுக்கு வந்தனர். முககவசம் அணிந்த பக்தர்களுக்கே அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்களின் உடல்வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டது. மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் அர்ச்சனை மற்றும் எலுமிச்சை மற்றும் பூ மாலை சாத்துதலுக்கு அனுமதி இல்லை என்று ஒலிபெருக்கில் அறிவுறுத்தப்பட்டது.

Next Story