சேலத்தில் விடிய விடிய மழை; 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது- பொதுமக்கள் அவதி


சேலத்தில் விடிய விடிய மழை; 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது- பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 5 July 2021 10:31 PM GMT (Updated: 5 July 2021 10:31 PM GMT)

சேலத்தில் விடிய, விடிய பெய்த மழையால் 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

சேலம்:
சேலத்தில் விடிய, விடிய பெய்த மழையால் 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் சேலம் புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், 5 ரோடு, 4 ரோடு, அஸ்தம்பட்டி, அழகாபுரம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் பல இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீரும் கலந்து ஓடியது. அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, நாராயண நகர், திருவாக்கவுண்டனூர் உள்ளிட்ட இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
பொதுமக்கள் அவதி
இதனால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். அவர்கள் தங்களது வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். சில வீடுகளில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதியின் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மழைநீரில் மூழ்கின.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமலும், விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள முடியாமலும் தவித்தனர். நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் ஒரே நாளில் 776 மில்லிமீட்டர் மழை பெய்தது.
ஆனைமடுவில் 101 மில்லி மீட்டர்
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவில் 101 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மிட்டரில் வருமாறு:- சேலம்-98.2, ஆத்தூர்-94, தம்மம்பட்டி-80, கரியகோவில்-71, பெத்தநாயக்கன்பாளையம்-62, கெங்கவல்லி-50, ஏற்காடு-41, எடப்பாடி-33, மேட்டூர்-30.8, சங்ககிரி-30.2, காடையாம்பட்டி-28.2, வீரகனூர்-27, ஓமலூர்-24, வாழப்பாடி-6 ஆகும். மாவட்டத்தில் கனமழையினால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்டவை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story