திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு நடை சுரங்கப்பாதை அமைத்து தர பயணிகள் கோரிக்கை


திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு நடை சுரங்கப்பாதை அமைத்து தர பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2021 6:25 AM GMT (Updated: 26 July 2021 6:25 AM GMT)

திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு நடை சுரங்கப்பாதை அமைத்து தர பயணிகள் கோரிக்கை.

ஆவடி,

ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள ரெயில் பயணிகள் பொதுநல சங்கம் சார்பில் அதன் செயலாளர் முருகையன் தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அதில், திருநின்றவூர் கிராமம் மற்றும் சென்னை-திருவள்ளூர் இணைப்பு சாலை சுற்றியுள்ள ஊர் மக்களை இணைக்கும் விதமாகவும் திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் நடை சுரங்கப்பாதை மற்றும் ரெயில்வே நிர்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) ஆகியவற்றை அமைத்து தரவேண்டும்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து திருவள்ளூருக்கும், திருவள்ளூரில் இருந்து தாம்பரம் வரையும் நேரடி மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும்.

திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். அரக்கோணம் - சேலம் விரைவு வண்டியை ஆவடியில் இருந்து இயக்கி திருநின்றவூர், திருவள்ளூர் ரெயில் நிலையங்களில் நிறுத்தம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கி இருந்தது.

அதனடிப்படையில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் தென்னக ரெயில்வே துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அப்போது தண்டவாளத்தை கடக்கும் போது பயணிகள் ரெயில் விபத்தில் சிக்கி இறப்பதை தடுக்கும் வகையில் கிடப்பில் போடப்பட்ட நடை சுரங்கபாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Next Story