சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க புதிய திட்டம்


சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க புதிய திட்டம்
x
தினத்தந்தி 30 July 2021 9:52 AM IST (Updated: 30 July 2021 9:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சாலைகள், தெருக்கள், பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சென்னை,

சென்னை மாநகரின் பசுமை பரப்பினை அதிகரிக்கும் வகையில் சாலைகள், தெருக்கள் மற்றும் பூங்காக்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது தொடர்பாக குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன்மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கமிஷனர் பேசியதாவது:-

சென்னை மாநகரில் பசுமை பரப்பளவை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டாலும் அவற்றை பராமரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் பசுமை பேரியக்கமாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பராமரிப்பு

மாநகராட்சிக்கு உட்பட்ட பஸ் சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் சாலை பணிகள் மேற்கொள்ளும் போது, அந்த பணிகளுடன் சேர்த்து சாலைகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் இணைந்து மேற்கொள்ளப்படும். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க ஆர்வமுள்ள குடியிருப்பு நலச் சங்கங்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரை அணுகி அனுமதியினை பெற்றுக் கொள்ளலாம்.

மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முன்வரும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு மாநகராட்சியின் சார்பில் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் விலையில்லாமல் வழங்கப்படும். மண்டல அலுவலர்களின் தலைமையில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரிக்கும் குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டாக்டர் எஸ்.மனிஷ், வட்டார துணை ஆணையாளர்கள் டி.சினேகா, ஷரண்யா அரி, சிம்ரன்ஜீத் சிங் கலான், குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story