சென்னையில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி; பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாநகராட்சி ஏற்பாடு


சென்னையில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி; பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாநகராட்சி ஏற்பாடு
x
தினத்தந்தி 2 Sept 2021 9:53 AM IST (Updated: 2 Sept 2021 9:53 AM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 3 கொரோனா தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள், பள்ளிகள், கல்லூரிகள், மாநகராட்சி அலுவலகங்களில் நடத்தப்பட்டு வந்தது.

நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பள்ளிகளில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா மினி கிளினிக், சமுதாய நலக்கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் 45 தடுப்பூசி முகாம்கள் நேற்று முதல் 200 முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 200 முகாம்களில் 35 ஆயிரத்து 728 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேற்று 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி முகாம்கள் மாற்றப்பட்டது குறித்து முறையான அறிவிப்பு பொதுமக்களிடையே சென்றடையாததால் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்தனர். இனி வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு சென்னையில் 1 லட்சத்துக்கு மேல் தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story