ஊரக உள்ளாட்சி தேர்தல்- வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்


ஊரக உள்ளாட்சி தேர்தல்- வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 30 Sep 2021 7:15 PM GMT (Updated: 30 Sep 2021 7:15 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல்

நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலின்போது பதிவான ஓட்டுகள் போடப்படும் ஓட்டு பெட்டிகள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச்செல்லப்படும். 
அங்கு வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களுக்கும் தலா 1 வாக்கு எண்ணும் மையம் என மொத்தம் 9 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாக்கு எண்ணும் மையங்கள்

முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கலை அறிவியல் கல்லூரி, மானூர் ஒன்றியத்துக்கு ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு இடைகால் மெரிட் பாலிடெக்னிக் கல்லூரி, சேரன்மாதேவி ஒன்றியத்துக்கு சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பை ஒன்றியத்துக்கு விக்கிரமசிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் நாங்குநேரி ஒன்றியத்துக்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், களக்காடு ஒன்றியத்துக்கு திருக்குறுங்குடி டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும், வள்ளியூர் ஒன்றியத்துக்கு அடங்கார்குளம் எஸ்.ஏ.ராஜா கலைக்கல்லூரியிலும், ராதாபுரம் ஒன்றியத்துக்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஏற்பாடுகள் மும்முரம்

இங்கு வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கான பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் ஓட்டு பெட்டிகள் வைக்கப்படும் அறைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகள் எண்ணும் அறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் அறைகளுக்குள் வாக்குச்சீட்டுகளை பிரித்து போடவும், அவற்றை எண்ணி முடிவுகளை சொல்வதற்கும் உரிய மேஜைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதை சுற்றிலும் இரும்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. அதற்கு வெளியே நின்று வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க கேமராக்களும் பொருத்தப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

மேலும் வேட்பாளர்கள், முகவர்கள் வந்து செல்வதற்கான வழிகள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு தேவையான வழிகள் கம்புகளை கொண்டு கட்டி உருவாக்கப்பட்டு வருகிறது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு உருவாக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது. 
இந்த பணிகளை நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன், கலெக்டர் விஷ்ணு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

தென்காசியில் 10 இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் 10 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆலங்குளம் ஒன்றியத்துக்கு நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, கடையம் ஒன்றியத்துக்கு மேட்டூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர் ஒன்றியத்துக்கு கொடிகுறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரி, கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு அத்தியூத்து சர்தார் ராஜா என்ஜினீயரிங் கல்லூரி, குருவிகுளம் ஒன்றியத்துக்கு அய்யனேரி உண்ணாமலை கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு வீரசிகாமணி விவேகானந்தா சில்வர் ஜூப்ளி மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் ஒன்றியத்துக்கு புளியங்குடி வீராசாமி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரி, செங்கோட்டை ஒன்றியத்துக்கு செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி ஒன்றியத்துக்கு குற்றாலம் பராசக்தி கல்லூரி மற்றும் வாசுதேவநல்லூர் ஒன்றியத்துக்கு சுப்பிரமணியபுரம் வியாசா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story