குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு


குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2021 7:37 PM GMT (Updated: 30 Sep 2021 7:37 PM GMT)

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

தென்காசி:
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று தென்காசி கலெக்டர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார்.

குற்றால சீசன்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.
இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் உற்சாகமாக குளியல் போட்டு செல்வார்கள்.
 
சமூக வலைத்தளங்களில் தகவல்

இந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ரம்மியமான சூழல் நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை 2-வது ஆண்டாக தற்போது வரை அமலில் உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று (1-ந் தேதி) முதல் அனுமதி அளிக்கப்படுவதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. 

தடை நீட்டிப்பு

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறிஇருப்பதாவது:- 
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது பரவல் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை திறப்பது குறித்து தமிழக அரசு அறிவிக்கும் வழிகாட்டுதல்களை பொறுத்து தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதுவரைக்கும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கும். சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை சுற்றுலா பயணிகள் நம்ப வேண்டாம்.  
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story