சொத்து தகராறில் வாலிபர் குத்திக்கொலை


சொத்து தகராறில் வாலிபர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 30 Sep 2021 8:45 PM GMT (Updated: 30 Sep 2021 8:45 PM GMT)

பாகல்கோட்டை அருகே சொத்து தகராறில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட வாலிபரின் சித்தப்பா உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பாகல்கோட்டை: பாகல்கோட்டை அருகே சொத்து தகராறில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட வாலிபரின் சித்தப்பா உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வாலிபர் படுகொலை

பாகல்கோட்டை மாவட்டம் குனகுந்த் அருகே மேகலபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மகன் புனித்குமார்(வயது 28). தந்தையும், மகனும் விவசாயி ஆவார்கள். நேற்று முன்தினம் மாலையில் கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு புனித்குமார் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் புனித்குமாரை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.

பின்னர் அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் புனித்குமாரை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். மேலும் கத்தியாலும் சரமாரியாக குத்தினார்கள். இதில், பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய புனித்குமார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.

சித்தப்பாவுக்கு வலைவீச்சு

தகவல் அறிந்ததும் குனகுந்த் போலீசார் விரைந்து வந்து புனித்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பசவராஜிக்கும், அவரது சகோதரர் குடும்பத்திற்கும் சொத்து பிரச்சினை இருந்துள்ளது. சொத்தை பிரித்து கொடுக்கும்படி தனது சித்தப்பாவுடன் புனித்குமார் சண்டை போட்டு வந்துள்ளார். இதையடுத்து, 7 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். ஆனாலும் 3 ஏக்கர் நிலம் கொடுக்காததால், 2 குடும்பத்திற்கும் இடையே சண்டை நடந்துள்ளது.

இந்த சொத்து தகராறு காரணமாகவே புனித்குமாரை, அவரது சித்தப்பா கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குனகுந்த் போலீசார் வழக்குப்பதிவு செய்து புனித்குமாரின் சித்தப்பா உள்பட 5 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story