செவிலியர்களுக்கு தனி இயக்குனரகம் உருவாக்க வேண்டும்


செவிலியர்களுக்கு தனி இயக்குனரகம்  உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Oct 2021 12:31 AM GMT (Updated: 1 Oct 2021 12:31 AM GMT)

செவிலியர்களுக்கு தனி இயக்குனரகம் உருவாக்க வேண்டும்

தர்மபுரி, அக்.1-
செவிலியர்களுக்கு தனி இயக்குனரகத்தை உருவாக்க வேண்டும் என்று அரசு செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிவாரண உதவி
தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநிலசெயற்குழு கூட்டம் தர்மபுரி ரெயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் வளர்மதி, காளியம்மாள், ஜீவா ஸ்டாலின் மாநிலதுணைத்தலைவர்கள் தேவேந்திரன், கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 3 மாதத்திற்கு ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பணி காலத்தில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவியும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். பணி காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.
தனி இயக்குனரகம்
மத்திய அரசில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இணையான ஊதியம் தமிழகத்தில் பணிபுரியும் அரசு செவிலியர் களுக்கும் வழங்கவேண்டும். எம்.ஆர்.பி. தகுத்தேர்வில் தேர்ச்சிபெற்று தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றி வருபவர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் நிலை-1, நிலை -2 பணி நிலைகளை ஏற்படுத்த வேண்டும். 55 வயதை கடந்த செவிலியர்களுக்கு இரவு நேரம் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். செவிலியர்களுக்கு தனி இயக்குனரகம் உருவாக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story