தூத்துக்குடி மாவட்டத்தில் இரும்பு பட்டறைகளில் அரிவாள் வாங்குபவர்கள் விவரங்களை பதிவு செய்யப்படும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில்  இரும்பு பட்டறைகளில் அரிவாள் வாங்குபவர்கள் விவரங்களை பதிவு செய்யப்படும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2021 12:43 PM GMT (Updated: 1 Oct 2021 12:43 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் இரும்பு பட்டறைகளில் அரிவாள் வாங்குபவர்கள் விவரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இரும்பு பட்டறைகளில் அரிவாள் வாங்குபவர்கள் விவரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
ரவுடிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஏற்கனவே வழக்குகளில் தொடர்புடையவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தவர்கள், ஆயுதங்களை பதுக்கி வைத்து இருப்பவர்களையும், ரவுடிகளையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-
 தூத்துக்குடி மாவட்டத்தில் அரிவாள் புழக்கத்தை தடுக்கும் வகையில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 8 இரும்புப்பட்டறைகள் உள்ளன. அந்த பட்டறை உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளோம். பட்டறைகளில் ஆயுதங்கள் செய்ய வருபவர்களின் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பட்டறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். கண்காணிப்பு கேமரா பொருத்த வசதி இல்லாதவர்களின் கடை அருகே போலீஸ் சார்பில் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
1,500 போலீசார் பாதுகாப்பு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அரசு வகுத்து உள்ள கொரோனா விதிமுறைகளின்படி கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். கோவிலில் கொடியேற்றம், சூரசம்ஹாரம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
மற்ற நாட்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தசரா திருவிழாவை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story