இசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை


இசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
x

இசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இசேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும், என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இசேவை மையம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், பல தனியார் கம்ப்யூட்டர் மையங்களில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட இ-சேவை citizen login-ல் 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களும், 6 வகையான முதியோர் உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றிதழ்களில் எழுத்துப்பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல், இடைத்தரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அரசு பொது இ-சேவை மையங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றிற்கு ரூ.60ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10ம், சமூகநலத்துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120ம் இணையவழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60ம் சேவைக்கட்டணமாக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
இந்த நிலையில் தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் தொடங்கப்பட்ட citizen login-ல் பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, அரசு உரிமம் பெற்ற மையங்கள் தவிர பிற தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ அபராதம் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இ-சேவை மையம் நடத்துவதற்கான அரசு உரிமம் பெற்றுள்ள தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் மேலே குறிப்பிட்ட சேவைக்கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வது தெரிய வந்தால், அந்த மையங்களின் பொது இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து அருகில் உள்ள தாலுகா அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க வங்கிகளில் அமைந்துள்ள பொது இ-சேவை மையங்கள், கிராமப்புறங்களில் மகளிர் திட்ட அலுவலகத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு கட்டிடங்களில் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்கள் மற்றும் அரசு உரிமம் பெற்ற தனியார் கம்ப்யூட்டர் மையங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக வசூல் செய்வது தொடர்பான புகார்களை tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 180042 51333 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் மூலமோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
-------------

Next Story