வாணியம்பாடி அருகே பாலாற்று பாலத்தில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது


வாணியம்பாடி அருகே பாலாற்று பாலத்தில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 1 Oct 2021 4:11 PM GMT (Updated: 1 Oct 2021 4:11 PM GMT)

வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் பாலாற்று பாலத்தில் புதிதாக கட்டப்பட்ட தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் பாலாற்று பாலத்தில் புதிதாக கட்டப்பட்ட தடுப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய தடுப்புச்சுவர்

வாணியம்பாடி பாலாற்று மேம்பாலம் 1977-ம் ஆண்டு கட்டி திறக்கப்பட்டது. இந்த பாலம் வாணியம்பாடி நகரையும், உதயேந்திரம் பேரூராட்சி பகுதியையும் இணைக்கிறது. இந்த பாலத்தின் வழியாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இருந்த பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர். 

பாலத்தின் மீது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்தசில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, மறு பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தின் இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கும் குறைவான தடுப்பு சுவர்கள் இருந்தாலும் விபத்துகள்  நடக்கவில்லை. 

இடிந்து விழுந்தது

ஆனால் தற்போது பாலத்தின் பக்கவாட்டு சுவர்களை பாதுகாப்பு கருதி சுமார் 5 அடி உயரத்திற்கு உயர்த்தி கட்டி வருகிறார்கள். சரியான அடித்தளம் இல்லாததால் பாலத்தின் கிழக்கு பகுதியில் தடுப்புச்சுவர்கட்ட இரும்பு கம்பி சென்ட்ரிங்வேலை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்ட்ரிங் கம்பிகள் அடித்தளத்துடன் சரிந்து ஆற்றில் விழுந்து விட்டது. 

ஆற்றில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் ஆற்று வெள்ளத்தை, இந்த தடுப்புச்சுவற்றில் சாய்ந்துக் கொண்டுதான் பார்ப்பார்கள். அதேபோல ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மயானக்கொள்ளை திருழாவும், மேட்டுப்பாளையம் திருப்பதி கங்கையம்மன் திருவிழாவும் பாலத்தின் அருகில்தான் பாலாற்றில் நடக்கின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் இந்த பாலத்தில் இருந்து தான் திருவிழாவை பார்க்கிறார்கள். 

எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் முன்வர வேண்டும் என பொதுமக்கள் புகார் மனு அனுப்பி உள்ளனர்.

Next Story