‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Oct 2021 4:57 PM GMT (Updated: 1 Oct 2021 4:57 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள் வருமாறு:-

குளத்து மடை சரிசெய்யப்படுமா? 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா கரந்தானேரியை அடுத்த நெடுங்குளத்தில் உள்ள குளத்து மடை ஷட்டர் உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் மழை காலத்தில், குளத்து தண்ணீர் பாசனத்துக்கு பயன்படாமல் வீணாக வெளியேறி வருகிறது. எனவே, உடனடியாக மடைக்கு ஷட்டர் பொருத்தி சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- வேலாயுதம், நெடுங்குளம்.

குடிநீர் பிரச்சினை 

நெல்லை ரகுமத்நகர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் வினியோகம் சரியான முறையில் இல்லை. வாரம் ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தால் பொதுமக்கள் பயன் அடைவர். 
- முத்து, ரகுமத்நகர். 

பாலம் அமைக்கப்படுமா?

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து கொத்தன்குளம் விலக்கில் இருந்து கொத்தன்குளத்துக்கு செல்லும் சாலையில் தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது. அது தாழ்வாக அமைந்து உள்ளதால், மழை காலத்தில் பாலத்தின் மீது அதிகளவில் தண்ணீர் செல்கிறது. அப்போது அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். ஆகையால் அங்கு கண் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம். 

வீணாகும் தண்ணீர்

நெல்லை பொதிகைநகர் ஜோஸ் பள்ளி அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அங்கு குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவகுமார், திருமால்நகர்.
 
பஸ் மீண்டும் வருமா?

தென்காசியில் இருந்து புல்லுக்காட்டுவலசைக்கு 6 ‘ஏ’ என்ற அரசு பஸ் முன்பு வந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த பஸ் தற்போது வரவில்லை. இதனால் தென்காசிக்கு செல்ல வேண்டுமானால், மத்தளம்பாறைக்கு சென்று பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், மாணவ-மாணவிகள், கர்ப்பிணிகள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் அந்த பஸ் மீண்டும் புல்லுக்காட்டுவலசைக்கு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- அ.முத்துசுபா, புல்லுக்காட்டுவலசை. 

பயணிகள் நிழற்கூடம் தேவை 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா படுக்கப்பத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட படுக்கப்பத்து மறக்குடி ஊரில் பயணிகள் நிழற்கூடம் இருந்தது. பழுதடைந்து காணப்பட்ட அந்த நிழற்கூடத்தை இடித்து அகற்றி 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் புதிதாக நிழற்கூடம் கட்டவில்லை. இதனால் அருகில் உள்ள மரத்துக்கு அடியில் நின்று பயணிகள் பஸ் ஏறி சென்று வருகின்றனர். எனவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
- முத்துக்குமார், படுக்கப்பத்து மறக்குடி.

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரின் 2 தூண்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பு அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆவுடையப்பன், காயல்பட்டினம்.

பாதியில் நிறுத்தப்பட்ட பணி 

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 2-வது தெரு வடக்கு பகுதியில் இருந்து லெவிஞ்சிபுரம் 1-வது தெரு மேற்கு பகுதி வரை செல்லும் பிரதான சாலை புதிய சாலை அமைப்பதற்காக ேதாண்டி போடப்பட்டு, புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளும் நடந்தது. இதனால் சாலை முழுவதும் குண்டும்-குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டு உள்ள பணியை மீண்டும் தொடங்கி விரைவாக முடிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். 
- ஆறுமுகம், லெவிஞ்சிபுரம். 

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

தூத்துக்குடியில் இருந்து வேப்பன்குளம் கிராமத்துக்கு அரசு பஸ் (தடம் எண்-311) இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ் அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு வேப்பன்குளத்துக்கு வரும். பின்னர் காலை 7.15 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு செல்லும். அங்கிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, 9.40 மணிக்கு வேப்பன்குளம் வந்து சேரும். பின்னர் வேப்பன்குளத்தில் இருந்து புறப்பட்டு ஓட்டப்பிடாரம் வழியாக தூத்துக்குடி செல்லும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- வேலுச்சாமி, வேப்பன்குளம்.

Next Story