காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. ரூ.77 ஆயிரம் பறிமுதல்


காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. ரூ.77 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Oct 2021 5:49 PM GMT (Updated: 1 Oct 2021 5:49 PM GMT)

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

காட்பாடி

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனைச்சாவடியில் சோதனை

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் ஆந்திர மாநில எல்லையில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. இங்கு ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களும் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகிறது.
இந்த சோதனைச்சாவடியில் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடிக்கு சென்றனர். அவர்கள் உள்ளே சென்றதும் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஜன்னல், கதவுகளை மூடினர்‌.

ரூ.77 ஆயிரம் பறிமுதல்

மேலும் அங்கிருந்தவர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டனர். தொடர்ந்து சோதனை நடத்தினர். அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமாஞானகுமாரி என்பவர் பணியில் இருந்தார்.

சோதனையில் கணக்கில் இல்லாத ரூ.77 ஆயிரத்து 110-ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு செய்தனர். 

அதில், தமிழகத்திற்கு வரும் லாரிகளிலும் மற்றும் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களிலும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பணம் லஞ்சமாக பெற்றது தெரியவந்தது. மேலும் லாரிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட காய்கறிகள் மற்றும் பூக்களையும் லஞ்சமாக வாங்கி வைத்திருந்தனர். அதனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். 

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமாஞானகுமாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை சோதனை மற்றும் விசாரணை நடந்தது.
சுமார் 5 மணி நேரம் நடந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டது. இதை லாரி, டிராவல்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சார்பதிவாளர் அலுவலகம்

வேலூர் வேலப்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story