பாக்குதோட்ட அதிபரை குடும்பத்தகராறில் மனைவி, மகன்களே தீர்த்து கட்டியது அம்பலம்


பாக்குதோட்ட அதிபரை குடும்பத்தகராறில் மனைவி, மகன்களே  தீர்த்து கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 1 Oct 2021 8:57 PM GMT (Updated: 1 Oct 2021 8:57 PM GMT)

தீர்த்தஹள்ளி காட்டுப்பகுதியில் காருடன் எரிந்து பிணமாக கிடந்தவர், பாக்குத்தோட்ட அதிபர் என்றும், குடும்பத்தகராறில் மனைவி, மகன்களே அவரை தீர்த்து கட்டியதும் அம்பலமாகியுள்ளது.

சிவமொக்கா: தீர்த்தஹள்ளி காட்டுப்பகுதியில் காருடன் எரிந்து பிணமாக கிடந்தவர், பாக்குத்தோட்ட அதிபர் என்றும், குடும்பத்தகராறில் மனைவி, மகன்களே அவரை தீர்த்து கட்டியதும் அம்பலமாகியுள்ளது. 

தீர்த்தஹள்ளி காட்டுப்பகுதியில்... 

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா உணசேகொப்பா கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதியில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து கிராம மக்கள், கார் அருகே சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் ஒரு நபர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், தீர்த்தஹள்ளி போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

பின்னர் காருக்குள் உடல்கருகிய நிலையில் கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் முதற்கட்டமாக அவரை, யாரோ மர்மநபர்கள் கொன்று உடலை காரில் எடுத்து வந்து காருடன் உடலை தீவைத்து எரித்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

பாக்குத்தோட்ட அதிபர்

இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் காரில் உடல் கருகி பிணமாக கிடந்தவர், சிவமொக்கா மாவட்டம் ஒசநகரை சேர்ந்த வினோத்(வயது 56) என்பதும், பாக்கு தோட்ட அதிபர் என்று தெரியவந்தது. இதற்கிடையே போலீசார் வினோத்தின் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர்கள் போலீசிடம் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். 

மேலும் வினோத்தின் மனைவி, மகன்கள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வினோத்தின் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, வினோத்துக்கும், அவரது மனைவி, மகன்களுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. 

குடும்பத்தகராறு

இந்த நிலையில் கடந்த மாதம்(செப்டம்பர்) 26-ந்தேதி இரவு வினோத்திற்கும், அவரது மனைவி, மகன்களுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. வினோத்துக்கும், அவர்களது குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் உண்டாகியுள்ளது. மேலும் வினோத்துடன் அவரது தம்பி மகன், மனைவியின் அக்காள் மகன் ஆகிய 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சந்தர்ப்பத்தில் மனைவி, மகன்கள் உள்பட 5 பேரும் வினோத்தை இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் மனைவி, மகன்கள் உள்பட 5 பேரும் கொலையான வினோத்தின் உடலை அவருடைய காரில் போட்டுள்ளனர்.

 பின்னர் அந்த காரை உணசேகொப்பா காட்டுப்பகுதிக்கு ஓட்டி வந்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு காரில் இருந்த பெட்ரோலை எடுத்து வினோத்தின் உடல் மற்றும் காரில் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்கு வந்துள்ளனர். வரும் வழியில் வினோத்தின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வீசியும் உள்ளனர். மேலும் 5 பேரும் வீட்டில் படிந்த வினோத்தின் ரத்தகறையை சுத்தம் செய்து வினோத்தின் துணிமணிகள், செருப்பை தீவைத்து எரித்ததும் தெரியவந்தது. 

5 பேர் கைது

இதையடுத்து வினோத்தை அடித்து கொன்று காருடன் தீவைத்து எரித்த மனைவி, மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story