மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த கோரி யாதகிரி அருகே முழுஅடைப்பு


மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த கோரி யாதகிரி அருகே முழுஅடைப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 8:58 PM GMT (Updated: 1 Oct 2021 8:58 PM GMT)

மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த கோரி யாதகிரி அருகே சைதாபுராவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடைகள் மூடப்பட்டு இருந்தன.

பெங்களூரு: மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த கோரி யாதகிரி அருகே சைதாபுராவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடைகள் மூடப்பட்டு இருந்தன. 

மத மாற்றம் தடை சட்டம்

கர்நாடகத்தில் லவ் ஜிகாத் பெயரில் மதமாற்றம் நடைபெற்று வருவதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே கர்நாடகத்தில் மத மாற்றம் தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று இந்து அமைப்பினர் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் கர்நாடகத்தில் மத மாற்றம் தடை சட்டத்தை அமல்படுத்த கோரியும், லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் யாதகிரி மாவட்டம் சைதாபுராவில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். 

சைதாபுராவில் முழுஅடைப்பு

அதன்படி நேற்று சைதாபுராவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. 
இதையொட்டி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. மேலும் வாடகை கார்கள், ஆட்டோக்கள், தனியார் மற்றும் அரசு பஸ்களும் ஓடவில்லை. இதனால் கடை வீதிகள், பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. 

நேற்று நடந்த முழு அடைப்பால் அந்தப் பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையொட்டி சைதாபுரா டவுனில் சத்ரபதி சிவாஜி அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் அந்த அமைப்பினர் தலைவர் பரசுராம் சேகுரகார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மடாதிபதிகள் பஞ்சம சித்தலிங்க சுவாமி, சென்னவீரா சுவாமி உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர். 

Next Story