புது ஆற்றில் குதித்த பள்ளி மாணவியின் கதி என்ன


புது ஆற்றில் குதித்த பள்ளி மாணவியின் கதி என்ன
x
தினத்தந்தி 1 Oct 2021 9:12 PM GMT (Updated: 1 Oct 2021 9:12 PM GMT)

தஞ்சையில் புதுஆற்றில் குதித்த பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கினார். காப்பாற்ற சென்ற வாலிபரும் இழுத்து செல்லப்பட்டார்.

தஞ்சாவூர்;
தஞ்சையில் புதுஆற்றில் குதித்த பள்ளி மாணவி தண்ணீரில் மூழ்கினார். காப்பாற்ற சென்ற வாலிபரும் இழுத்து செல்லப்பட்டார்.
பள்ளி மாணவி
தஞ்சை மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவை சேர்ந்தவர் ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் (வயது15). இவர் மானம்புச்சாவடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுகாலை 11.15 மணி அளவில் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தின் அருகே ஆயிஷாபேகம் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர், கல்லணைக் கால்வாய் என்ற புதுஆற்றில் குதித்ததாக தெரிகிறது. தண்ணீரில் அவர் இழுத்து செல்வதை பார்த்த அதே பகுதியில் பிளாக்ஸ் நிறுவனத்தில்பதாகை வடிவமைப்பு பணி மேற்கொண்டு வரும் பூதலூரை சேர்ந்த முகிலன் (38) என்பவரும், அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு வாலிபரும் வேகமாக ஓடி வந்து ஆற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர்.
வாலிபரின் கதி என்ன
ஆனால் இவர்களும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். தண்ணீர் வேகமாக இழுத்து சென்றதால் முகிலனுடன் ஆற்றிற்குள் குதித்த வாலிபர் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகை பகுதியில் உள்ள படித்துறையில் ஏறிவிட்டார். ஆனால் ஆயிஷா பேகம், அவரை காப்பாற்ற சென்ற முகிலன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து தஞ்சை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அதிகாரி திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் தேடி பார்த்தனர். தஞ்சை காந்திஜிசாலை ஆற்றுப்பாலம் முதல் வெட்டிக்காடு ஆற்றுப்பாலம் வரை தேடி பார்த்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சுமார் 7 மணிநேரம் தீயணைப்பு வீரர்கள் தேடி பார்த்தும் இருவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை.
போலீசார் விசாரணை
இரவு நேரமாகிவிட்டதால் தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் கைவிட்டனர். இன்று (சனிக்கிழமை) மீண்டும் தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள் மேற்கொள்ள உள்ளனர். தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே கிடந்த பேக் மற்றும் அதில் இருந்த அடையாள அட்டையை வைத்து தான் தண்ணீரில் குதித்தது ஆயிஷா பேகம் என்பது தெரியவந்தது. அவர் எதற்காக ஆற்றில் குதித்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story