விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அறிமுகம்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
படகு போக்குவரத்து
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதன்படி பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று வருகிறது.
தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும். இதில் சாதாரண படகு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50-ம், வரிசையில் நிற்காமல் நேரடியாக செல்வதற்கு கட்டணமாக ரூ.200-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் டிக்கெட் பதிவு அறிமுகம்
படகு போக்குவரத்துக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இல்லாததால், வெளிமாவட்டங்களில் இருந்து தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை நேற்று முதல் அறிமுகம் செய்தது. இதற்காக https://tamilshiponlineticket.com/என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் ஆன்லைன் முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தி.மு.க.வினர் கொண்டாட்டம்
இதை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதன்படி தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான தாமரைபாரதி, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் சுற்றுலா பயணிகளிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெஸ்டின், பேரூர் பொருளாளர் இன்பம், நிர்வாகி பாபு மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story