திருப்போரூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணி தீவிரம்; துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கொடி அணிவகுப்பு


திருப்போரூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணி தீவிரம்; துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 2 Oct 2021 7:03 AM GMT (Updated: 2 Oct 2021 7:03 AM GMT)

திருப்போரூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

கொடி அணிவகுப்பு

வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நிலையில் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50 ஊராட்சிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ் படை, ஊர்க்காவல் படை போக்குவரத்து துறை காவலர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீசாருடன் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் முக்கியமான இடமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செங்காட்டு பகுதியில் முதற்கட்டமாக வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக போலீஸ்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

தீவிர வாக்குசேகரிப்பு

அதனை தொடர்ந்து, பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒன்றான இள்ளலூர் கிராமத்தில் தொடங்கி அந்த பகுதி நான்கு வீதிகளிலும் சுற்றிய போலீஸ் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

முடிவில் ஓ.எம்.ஆர். சாலை இள்ளலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்போரூர் அம்பேத்கர் சிலை வரை சென்று கொடி அணிவகுப்பை முடித்தனர்.

திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் பரப்புரை வரும் 4-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைவதால் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.Next Story