புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Oct 2021 2:08 PM GMT (Updated: 2 Oct 2021 2:08 PM GMT)

புகார் பெட்டி

தினத்தந்தி செய்தி எதிரொலி

மயிலம்பட்டிக்கு புதிய பஸ்

உக்கடத்தில் இருந்து மயிலம்பட்டிக்கு பஸ் இயக்கப்படவில்லை என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டி காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது உக்கடத்தில் இருந்து மயிலம்பட்டிக்கு புதிதாக பஸ் இயக்கப்படுகிறது. இதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கு நன்றி.
ரூபிணி, கரையாம்பாளையம்.

இருக்கைகளை சீரமைக்கலாமே...

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் முன்பு நோயாளிகள், பார்வையாளர்கள் காத்திருப்பதற்காக இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. சில இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் சிகிச்சைக்கு வருகிறவர்கள் உட்கார முடியாமல், நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதன் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இருக்கைகளை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.

பிரேமா, மேரீஸ்ஹில், ஊட்டி.


பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்

ஊட்டி கேஷினோ சந்திப்பு பகுதியில் நகராட்சி கழிப்பிடம் உள்ளது. சுற்றுலா நகரம் என்பதால் முக்கிய இடங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த பல மாதங்களாக அந்த கழிப்பிடம் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் பொதுமக்கள், டிரைவர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மேலும் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கும் குழ்நிலை இருக்கிறது. ஆகவே கழிப்பிடத்தை பேணி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஆனந்தன், கிரீன்பில்டு, ஊட்டி.

குழிகள் மூடப்படுமா?

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் உள்ள தார்சாலையில் ஏதோ சில பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் அந்த குழிகள் சரிவர மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த குழிகளை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனகராஜ், பூச்சியூர். 

புதர் மண்டி கிடக்கும் ஆறு

பொள்ளாச்சி அருகே நா.மு.சுங்கம்-ஆழியாறு சாலையில் பால்பண்ணை அருகில் உள்ள ஆற்றில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் நீர்வழித்தடம் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறி வருகிறது. எனவே புதர் மண்டி கிடக்கும் ஆற்றை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசுகி, பொள்ளாச்சி.

காட்டுப்பன்றிகள் தொல்லை

கோவை அருகே காருண்யா நகர் ஈடன் கார்டன் மற்றும் ஆர்.எம்.ஆர். கார்டன் பகுதியில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

நிவின் ரக்சன், காருண்யா நகர்.

உடைந்து தொங்கும் தெருவிளக்கு 

கோத்தகிரி சேட்லைன் பகுதியில் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அதில் ஒரு மின் கம்பத்தில் பொருத்தப்பட்டு இருந்த தெருவிளக்கு உடைந்து தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக நடந்து செல்பவர்களின் தலையில் விழுந்து காயம் ஏற்படுத்தும் ஆபத்து நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தெருவிளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணி கோத்தகிரி.

வளைந்த மின்கம்பம்

கோத்தகிரி மிஷன் காம்பவுண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட மின்கம்பம் பழுதடைந்து வளைந்த நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் சரிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், கோத்தகிரி.

மழைநீர் செல்ல வழி எங்கே?

கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக மதில்சுவர் இடிந்து சாக்கடையில் விழுந்து பல மாதங்கள் ஆகிறது. மேலும் அந்த சாக்கடை தூர்வாராததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் அருகில் உள்ள கட்டிடங்களுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாக்கடையை தூர்வாரி மழைநீர் செல்ல வழிவகை ஏற்படுத்த வேண்டும்.

ராஜூ, கோவை.

துர்நாற்றம் வீசும் கழிப்பறை

கோவை காந்திபுரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள கிராஸ்கட் சாலை சிக்னல் அருகே கழிப்பறை உள்ளது. அந்த கழிப்பறை கடந்த சில வாரங்களாக சரிவர சுத்தம் செய்யாமல் இருப்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர், காந்திபுரம்.

தெருநாய்கள் தொல்லை

கவுண்டம்பாளையம் எஸ்.கே.ஆர். நகர் 4-வது வீதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் இங்கு உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அச்சத்துடன் நடந்து செல்கிறார்கள். இதற்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரபி, கவுண்டம்பாளையம்.

சேதமடைந்த மின்மாற்றி கம்பம்(படம் உண்டு)

கோவை ராமகிருஷ்ணா சிக்னல் அருகே மேம்பாலத்தை ஒட்டியபடி ஒரு மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியின் ஒரு மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு கலவை பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது மின்கம்பம் மேலும் சேதமடைந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

குமரேசன், ஆவாரம்பாளையம்.

சுகாதார சீர்கேடு

கோவை மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட நாராயணன் வீதியில் சில வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகள் சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

கிருஷ்ணன், மசக்களிபாளையம்.

இறைச்சி கழிவுகள்

கோவை மாவட்டம் தொப்பம்பட்டி குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சர்வோதய காலனி பகுதியில் திறந்தவெளியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனை சாப்பிடுவதற்கு வரும் தெருநாய்கள், ஒன்றோடொன்று சண்டை போடுவதுடன், அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும் துரத்துகின்றன. மேலும் இறைச்சி கழிவுகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனா, குருடம்பாளையம்.

ஏ.டி.எம்.களில் குடிநீர் கிடைக்குமா?

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் சாலையோரங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் நிறுவப்பட்டன. இது ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பெரிதும் பயன்பட்டது. தற்போது பெரும்பாலான குடிநீர் ஏ.டி.எம்.களில் குடிநீர் வருவது இல்லை. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுத்து குடிநீர் ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹீரோரவிகுமார், ஊட்டி.

உடைந்த நடைபாதை(படம் உண்டு)
ஊட்டியில் படகு இல்லம் செல்லும் நடைபாதை சில இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனால் அதில் நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் இறங்கி நடப்பதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி, ஊட்டி. 


Next Story