போலீஸ்காரர் உள்பட 2 பேரின் வீடுகளில் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


போலீஸ்காரர் உள்பட 2 பேரின் வீடுகளில் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 2 Oct 2021 4:44 PM GMT (Updated: 2 Oct 2021 4:44 PM GMT)

தியாகதுருகத்தில் போலீஸ்காரர் உள்பட 2 பேரின் வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கண்டாச்சிமங்கலம்

போலீஸ்காரர்

தியாகதுருகம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் சதீஷ்(வயது 30). ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் இவர்  நேற்று முன்தினம் இரவு பணிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவரது மனைவி ராஜபிரியா வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கினார். 

பின்னர் மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வீ்ட்டில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது. கொள்ளைபோன நகை-பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

மற்றொரு வீட்டில்

இதேபோல் தியாகதுருகம் புக்குளம் சாலை குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி மனைவி கலையரசி(43). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

பின்னர் நேற்று காலை வீ்ட்டு கதவில் போடப்பட்ட பூட்டு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி கலையரசிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரும் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 1¾ பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. 

போலீசார் விசாரணை

ஒரேநாளில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பதால் இரு சம்பவத்திலும் ஒரே மர்மநபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வந்து சென்றனரா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். தியாகதுருகத்தில் ஒரே நாளில் போலீஸ்காரர் உள்பட 2 பேரின் வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் நகை-பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story