கோவையில் சேறும், சகதியுமாக மாறிய சாலைகள்

கோவையில் சேறும், சகதியுமாக மாறிய சாலைகள்
கோவை
கோவையில் தொடர் மழையின் காரணமாக சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
தொடர் மழை
கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரில் உக்கடம்-செல்வபுரம் சாலை, ரேஸ்கோர்ஸ் பகுதி, கோவை-திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கிகிடக்கிறது.
கோவை கலெக்டர் அலுவலக சாலை கடந்த மே மாதம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. பின்னர் அந்த சாலை சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. இந்த நிலையில் மழையின் காரணமாக இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சீரமைக்கப்படாத சாலைகள்
இதேபோல் போத்தனூர், வடவள்ளி-மருதமலை ரோடு, சீரநாயக்கன்பாளையம் சாலை, நீலிகோணம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் கேபிள்கள், மற்றும் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்த சாலையில் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி பயணிக்க வேண்டியது உள்ளது. எனவே மாநகர் பகுதிகளில் சீரமைக்கப்படாமல் உள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன் பகுதியில் பெய்த மழையால் தேங்கியிருந்த தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து அப்புறப்படுத்தினர்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியபோது, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. கோவையில் இன்று (நாளை), நாளை (நாளை மறுதினம்) என 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story