உளுந்தூர்பேட்டை அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


உளுந்தூர்பேட்டை அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Oct 2021 5:08 PM GMT (Updated: 2 Oct 2021 5:08 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உளுந்தூர்பேட்டை

நிதி நிறுவன ஊழியர்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி மகன் கனகராஜ்(வயது 28). இவர் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக கடந்த 6 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். 
சம்பவத்தன்று நிதி நிறுவன மேலாளர் வெங்கடேசன் மற்றும் கோபி ஆகியோர் கனகராஜ் ஒழுங்காக பணி செய்ய வில்லை என கூறி அவரை மற்ற ஊழியர்கள் முன்னிலையில் திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கனகராஜ் கடந்த 4 நாட்களுக்கு மேலாக வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். 

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊஞ்சல் ஊக்கில் வேட்டியால் கனகராஜ் தூக்கு போட்டுக் கொண்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.  இதை அறிந்த கனகராஜின் உறவினர்கள் அவர் பணிபுரிந்து வந்த நிதி நிறுவனத்தின் முன்பு திரண்டனர். நிதி நிறுவன அலுவலகத்தில் கனகராஜை அவமானப்படுத்தி திட்டியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது அண்ணன் சரண்ராஜ் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே கனகராஜ் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி  முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story