சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியாக உயர்வு


சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 2 Oct 2021 5:20 PM GMT (Updated: 2 Oct 2021 5:20 PM GMT)

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியாக உயர்ந்த நிலையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே 126 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை உள்ளது. கடந்த வாரம் இந்த அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. மேலும் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. 
இதற்கிடையே நேற்று முன்தினம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.28 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாளில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் வராகநதி கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story